மூழ்கிவிடாதீர்கள்....!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் மலர்ச்சியும், சமூக வலைதளங்களின் வளர்ச்சியும் வேகத்தை அளித்து,நம் விவேகத்தை பறிப்பது சரியா?
இதனால் நம் உடல் நிலையிலும் நம் உள நிலையிலும் பல பாதிப்புகள். உறவுகளிடையும் பல பிரச்சனைகள். அது மட்டும் அல்ல, இதனால் பல பல பிரச்சனைகள் நம்மை தேடி வரிசையில் வந்துகொண்டிருக்கிறது. இது தேவைதானா?
இந்த தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்தப்பிரச்சனைக்கான தீர்வுகள்தான் என்ன?
இதைப் பற்றிய பார்வையை சில நகைச்சுவை சான்றுகளுடன் பகிர்ந்துள்ளேன்.
ஆதிகாலத்தில் பறைதான் முதல் தகவல் தொடர்பு சாதனம், அதனை அடுத்து புறா விடு தூது, அடுத்து ஒற்றையர் மூலம் செய்தி அனுப்புவது, பிறகு அஞ்சல்,தொலைபேசி,இப்போ கணினி மற்றும் ஸ்மார்ட் போன்.ஆனால் அன்று இருந்த உண்மையான அன்பையும்,அக்கறையையும் தொலைத்துவிட்டு அதை நாம் இன்று இயந்திரமாக தேடிக்கொண்டிருக்கிறோம்…..
நிலவுக்குச் செல்லும்வரை நம் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதை நான் மறக்கவில்லை. ஆனால், பக்கத்து வீட்டுல யார் இருக்கா என்பதுகூட தெரியாத அளவுக்கு மக்கா போயிட்டோமே! காசுக்கு தண்ணீரையும் இலவசமாக சிம்கார்டையும் வாங்கிக்கொண்டிருக்கிறோமே!
இந்த சின்னஞ்சிறுசிங்க ஆன்ட்ராய்டு மொபைல் போன கையில வச்சுகிட்டு எத்தனை கேம்ஸ்…. சின்ன வயசுலையே பெரிய கண்ணாடி! பாக்கவே பாவம இருக்குங்க..
அத விடுங்க…நம்ம பாட்டி காலத்துல ……கடுகு ஒரு கலர்ல, வெந்தயம் ஒரு கலர்ல, சீரகம் ஒரு கலர்ல இருக்கும். நம்ம பாட்டி எல்லாத்தையும் எடுத்து வச்சு அம்மி-ல அரச்சி ஒரே கலர்ல வைக்கும். அது ஊர் முழுவதும் மணக்கும். அரைக்கிற பாட்டிக்கும் ஆரோக்கியம், அத சாப்பிடரவங்களுக்கும் ஆரோக்கியம். அத விட்டுட்டு…இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால… தீடீர் ரசம், தீடீர் சாம்பார், தீடீர் புளியோதரை. சாப்பிடரவங்க எல்லாம் தீடீர் தீடீர்-ன்னு மரணம். எவ்வளவு அற்புதமான விசயங்களையெல்லாம் தொலைத்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க கூட நேரமில்லாமல் இண்டர்நெட்டில் மூழ்கிக்கிடக்கிறோம் என்பதை நினைக்கும்போது மனம் கசிகிறதுங்க…
2000 வருடங்களுக்கு முன்னரே திருவள்ளுவர் முகம்பார்த்து பேசுவது நட்பல்ல, மற்றவரிடம் மனம்சார்ந்து பேசுவதே நட்பு என்பதை “முகநக நட்பது நட்பன்று” என்று விளக்கியுள்ளார். அந்த திருவள்ளுவர் இன்னைக்கு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாருன்னு தெரியுமா? “முகநூல் மூலம் கொள்வது நட்பல்ல” என்றுதான் சொல்லியிருப்பார்.
யாருங்க நண்பர்? யாருங்க ஒழுங்க லைக் போடுறா… எல்லாம் கடுப்பு லைக். நம்ம ஒரு லைக் போட்ட, அவங்க ஒரு லைக் போடுவாங்க..
போனவாரம் இப்படிதாங்க ஊருக்கு போறப்ப வாட்ஸ் அப் ஃப்ரீ-ன்னு சொன்னாங்க..நானும் என் நம்பரை கொடுத்துட்டு வந்தேன். வீட்டுக்கு வர்றதுக்குள்ள இந்த குரூப், அந்த குரூப், ஏழாவது படிச்ச குரூப், ஆறாவது படிச்ச குரூப், கோயம்புத்தூர் குரூப்-ன்னு ஒரு 100 குரூப் கிரியேட் பன்னிட்டாங்க. எத பாக்கிறதுனே தெரியல….
என் நண்பர் ஒருத்தர்சொன்னாருங்க அவரோட உறவினருக்கு இரத்தம் அவசரமாக தேவைபட்டது.வாட்ஸ் அப்-ல ஒரு மெசேஜ் அனுப்புனேன் உடனடியா கிடச்சதுன்னு சொன்னார். நான் ஒத்துக்கிறேங்க தொழில்நுட்பம் பல உதவி செய்கிறது என்று. எனக்கும் இப்படி ஒரு மெசேஜ் வந்தது. எப்போ?இரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த நிகழ்வு இன்னும் வந்துகொண்டிருக்கிறது. இரண்டு வருசத்துக்கு முன்னாடி இரத்தம் கேட்டவரு இப்ப இரத்தம் கிடச்சி நல்லா இருக்காரு. ஆனா, அவருக்கு இரத்தம் கேட்டு இன்னும் வந்துகிட்டு இருக்கு….அந்த காலத்தில மனிதன் சிந்திதான். அறிவோட வேலைசெய்தான். ஆனா இன்று எதுக்கு ஃபார்வேர்டு பன்னுறோம்-னே தெரியாம இதுல இருக்கறத அதுக்கும், அதுல இருக்கறத இதுக்கும் ஃபார்வேர்டு செய்றாங்க.
இன்னொரு மெசேஜ் வந்ததுங்க… “xxxxxxxxxxxx-ன்னு போட்டு அதுக்கு கீழயே, ஓ மை காட் ….. இத 10 பேருக்கு சேர் பன்னிங்கன்னா உங்க மொபைல் 2 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிடும்-னு. என்னங்க இது? மெசேஜ் சேர் பன்னா சார்ஜ் ஆகுமா? “அரசமரத்த தூக்கி அடிவயித்துல தொட்டா குழந்தை பிறக்கும்-னு சொல்வாங்க…” அந்தக் கதையால இருக்குது இது! இது போன்ற பல பல பொய் தகவல் விளம்பரத்தால் பலர் பணத்தையும், நேரத்தையும் இழந்துள்ளனர். படித்தவர்கள் எல்லாம் அடிமையாகி முட்டாளாகிட்டாங்க…அதாங்க வருத்தமே! ஞாபகசக்தி, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை அத விடுங்க ஒரு மொழி ஆளுமை இருக்கிறாங்க நம்மகிட்ட...நாளு வார்த்தையை சேர்த்து தமிழ்-ல தெளிவா பேசத்தெரியல..இதையெல்லாம் விரட்டியடித்துவிட்டு வாழ்க்கையையே ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த கட்டமைக்கும் உலகத்தில் கட்டுப்பாட்டை இழந்து போய்க்கொண்டிருக்கிறோம்.
இறுதியாக ஒரு கதை சொல்லி முடிக்கிறேன். தேவதை நேரில் வந்து மக்களுக்கு ஒரு வரம் கொடுக்கிறாள். என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறாள்? மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ள். தேவதை அவளே ஒரு வரத்தை கொடுக்கிறாள்….உங்களுக்கு தினமும் 86,400 ரூபாய் உங்க பேங்க் அக்கவுண்ட்டில் கிரிடிட் பன்னிடுறேன். நீங்க என்ன வேண்டுமானாலும் செலவு பன்னுங்க. ஆனால், அந்த நாள் இறுதியில் நீங்கள் செலவு செய்யாத பணம் மறைந்துவிடும் என்று கூறி மறைந்துவிடுகிறாள். நீங்க ஒரு நாள் செலவு செய்வீர்கள், இரண்டுநாள் செலவு செய்வீர்கள். கடைசியாக அந்த பணம் பயன்படுத்தமுடியாம போயிடும்.
நண்பர்களே, 86,400 ரூபாய் என்பது மணிதுளிகள் நண்பர்களே! அது பணமல்ல.ஒவ்வொரு நாளும் விடியும்போது 86,400 மணிதுளிகள் நமக்கு கொடுக்கப்படிகிறது. அதில் கிட்டதட்ட 5 அல்லது 6 மணிநேரம் இண்டெர்நெட்டிலும், வீடியோ கேம்ஸிலும், தொலைக்காட்சியிலும் மூழ்கிக்கிடக்கிறோம். அந்த நேர விரயம் திரும்பி வராது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை புரிந்துகொள்ள மறுபடியும் ஒரு சென்னை வெள்ளம் வரவேண்டுமென்றால் மீண்டும் வரட்டும் என்பேன். தெளிவாக சிந்தியுங்கள், செயல்படுங்கள், உங்கள் குழந்தைகளோடு கொஞ்சுங்கள், உறவினர்களோடு உரையாடுங்கள், பெற்றோர்களோடு மனம்விட்டு பேசுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே, அதுவே நம் வாழ்க்கையல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆனால், அதில் நம்மில் பலர் மூழ்கிக்கிடக்கிறீர்கள்.
முத்தெடுக்கிறோம் …. முத்தெடுக்கிறோம்…. என்று செத்துவிடாதீர்கள். முத்தெடுத்துவிட்டு வெளியே வந்துவிடுங்கள். உங்களுக்கு கிடைத்த முத்தான வாழ்க்கையை வளமாக வாழுங்கள்..!
- நாநி@(நித்யாதேவி)
Super
ReplyDeleteThank u
Delete